Published : 25 May 2020 04:46 PM
Last Updated : 25 May 2020 04:46 PM

ஓசூர் சந்தையில் கொத்தமல்லி விலை உயர்வு: 2000 ஹெக்டேரில் பயிரிட தோட்டக்கலைத் துறை நடவடிக்கை

தளி ஒன்றியம் அந்தேவனப்பள்ளி மலைக்கிராமத்தில் கொத்தமல்லி தோட்டத்தில் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்

ஓசூர்

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொத்தமல்லி பயிரிடும் பரப்பளவு குறைவு காரணமாக உற்பத்தி குறைந்து கடந்த சில வாரங்களாக ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வந்த ஒரு கட்டு கொத்தமல்லியின் விலை ரூ.40 வரை அதிகரித்துள்ளது.

இதனால் ஓசூர் பகுதியில் 2000 ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லியைப் பயிரிட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் தரமான மற்றும் வாசம் மிகுந்த கொத்தமல்லி சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் தினசரி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இங்கு விளையும் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் ஓசூர் கொத்தமல்லிக்கு பெங்களூரு காய்கறி சந்தை பிரதான சந்தையாக விளங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த செலவில் கொத்தமல்லி பயிரிட்டு கணிசமான அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஓசூர் பகுதியில் இருந்து கொத்தமல்லியை தமிழக நகரப்பகுதிகளும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத நிலையில் உள்ளூர் சந்தையில் கொத்தமல்லி தேக்கமடைந்து ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.5-க்கு விற்கத் தொடங்கியது. இதில் விவசாயிக்கு மொத்த விலையில் ஒரு கட்டு கொத்தமல்லிக்கு ரூ.2 மட்டுமே கிடைத்தது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொத்தமல்லி பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. கொத்தமல்லி பயிரிடும் பரப்பளவும் வழக்கத்தை விடப் பாதியாகக் குறைந்து போனது. உற்பத்தியும் பாதியாக குறைந்து சந்தையில் கொத்தமல்லி விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் ஒரு கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகி வந்த கொத்தமல்லியின் விலை தற்போது ஒரு கட்டுக்கு ரூ.40 வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் மொத்த விலையில் ஒரு கட்டு கொத்தமல்லிக்கு ரூ.20 வரை விலை கிடைப்பதால் கொத்தமல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தளி ஒன்றியம் அந்தேவனப்பள்ளி மலைக்கிராமத்தில் கொத்தமல்லி பயிரிட்டு வரும் விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது: ''ஒரு ஏக்கர் கொத்தமல்லி பயிரிட 6 முதல் 8 கிலோ வரை கொத்தமல்லி விதைகள் தேவைப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. கொத்தமல்லி 35 - 45 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லியை 8 ஆயிரம் கட்டுகள் முதல் 10 ஆயிரம் கட்டுகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். தற்போது பெங்களூரு காய்கறி சந்தை திறக்கப்பட்டுள்ளதால் கொத்தமல்லியின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இதனால் கொத்தமல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.'' இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தளி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலக அதிகாரி கூறியதாவது:
''கொத்தமல்லி குறுகிய காலத்தில் பலன் கொடுக்கக்கூடியது. இதனால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து கொத்தமல்லி பயிரிட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக இப்பகுதியில் விளையும் கொத்தமல்லியை இதர பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடியாமல் தேக்கம் ஏற்பட்டு கொத்தமல்லிக்கு உரிய விலை இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மீண்டும் கொத்தமல்லி பயிரிட இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கொத்தமல்லி உற்பத்தி குறைந்து, சந்தைக்குக் கொத்தமல்லி வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டு ஓசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இன்னும் இரண்டு வாரத்துக்குள் இந்தக் கொத்தமல்லி அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கி விடும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது. தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு கொத்தமல்லி விதைகள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன''. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x