Last Updated : 25 May, 2020 03:07 PM

 

Published : 25 May 2020 03:07 PM
Last Updated : 25 May 2020 03:07 PM

புதுச்சேரி வடிசாராய ஆலையில் சாராயம் திருட்டு என அதிமுக புகார்: சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை

அரசு சாராய வடி ஆலையில் சாராயம் திருட்டு தொடர்பாக அதிமுக கொறடா புகாரைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளார்.

கரோனா ஊரடங்கின்போது புதுச்சேரி சாராய வடி ஆலை சீல் வைக்கப்படாததால் பல கோடி சாராயம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் புகார் தந்துள்ளார். முழு விசாரணைக்கு உத்தரவிடவும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கவும் கோரியிருந்தார்

இதையடுத்து, புதுச்சேரி சாராய வடி ஆலை தலைவரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஜயவேணி, இதைப் பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார். "இக்குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபித்துவிட்டால் நான் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்கின்றேன். அவர் கூறியுள்ளதை நான் பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து அதிமுக கொறடா ஒதுங்கிக்கொள்ளத் தயாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இச்சூழலில் அதிமுக கொறடா தந்த புகாரை விசாரிக்குமாறு சிபிஐக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ கூறுகையில், "ஊரடங்கின்போது புதுச்சேரி அரசு சாராய ஆலையில் இருந்து சாராயம் கள்ளத்தனமாக எடுத்து விற்கப்பட்டது தொடர்பாக துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் தந்தேன்.

ஊரடங்கு காலத்தில் சாராயம் விற்க ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கிரண்பேடி தெரிவித்திருந்தார். சாராய ஆலையில் தவறு நடந்துள்ளது. இவை அனைத்தும் சிபிஐ விசாரணை முடிவில் தெரியவரும். அத்துடன் வடிசாராய ஆலைத் தலைவர் விடுத்துள்ள சவாலையும் ஏற்கிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி.யும், அதிமுக இணை செயலாளருமான ராமதாஸ் கூறுகையில், "புதுச்சேரி அரசின் சாராய ஆலையில் 10 லட்சம் லிட்டர் சாராயம் திருடப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏவின் புகாரை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ள துணைநிலை ஆளுநரின் செயல் நியாயமானது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தவுடன் ஆலையை சீல் வைத்து மூடியிருந்தால் இக்குற்றச்சாட்டே எழுந்திருக்காது. அதை ஏன் செய்யவில்லை? அதற்கு யார் பொறுப்பு?

இந்தக் குற்றச்சாட்டை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். உண்மை வெளிவந்த பின்னர் யாரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. அரசியலில் திருப்புமுனையை உருவாக்க இருக்கும் வழக்கு என்பதால் இதனை மிகக்கவனமாக அணுக வேண்டும்" என்று தெரிவித்தார்.

இச்சூழலில் பல்வேறு சமூக அமைப்புகளும் இவ்விஷயத்தில் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x