

விவசாய மின் இணைப்பு மின் மீட்டர் பொருத்துவது மின் திறனை அறியவே என, மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பூதாமூரைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவருக்கு ஆதனூர் கிராமத்தில் விளைநிலங்கள் உள்ளது. தனது விளைநிலத்தில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற கடந்த மார்ச் மாதம் தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய இணைப்பு பெற்றார். இதற்காக ரூ.3 லட்சம் கட்டணமும் செலுத்தியுள்ளார். இதையடுத்து, அவருக்கு இணைப்பு வழங்கப்பட்டு, அப்போது மின் கணக்கீடுக்கான மீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தற்போது விவசாயிகளிடையே பரவியதையடுத்து, தட்கல் மற்றும் தாட்கோ திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுபவர்களுக்கு மின் மீட்டர் பொருத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தட்கல், தாட்கோ உட்பட அனைத்து வகை விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொறுத்தப்படாது என அறிவிப்பு வெளியிட்டனர்.
இதுதொடர்பாக, மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "ஒரு விவசாயி என்ன வகையான மோட்டார் பயன்படுத்துகிறார், அதன்மூலம் அவர் பயன்படுத்தும் மின் திறனை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் பயன்பாடு அறிய முடியாததால், அதற்குரிய மானியத்தை மத்திய அரசிடமிருந்து பெறுவதில் தொடர்ந்து இடர்பாடு நீடிக்கிறது.
எனவே, முன்னேற்பாடாக அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் விவசாயிகளின் மின் பயன்பாட்டினை அறிந்து, மின்திறனை கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் மானியத்தை மத்திய அரசிடமிருந்து பெறும் நோக்கில் தான், மின்மோட்டார் பொருத்தப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அல்ல என்பது விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றனர்.
இது தொடர்பாக உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், "ஏற்கெனவே ஒருமுறை விவசாயி பயன்படுத்தும் மின் மோட்டாரின் திறனைக் கொண்டு அவர் பயன்படுத்தும் மின்சாரத்தை அறிய மின் மீட்டர் பொருத்தினர்.
அப்போது, பலத்த எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், தற்போது தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு மின் மீட்டர் பொருத்துவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் திறனை கணக்கிட வேண்டுமெனில் ஒவ்வொரு மின்மாற்றியிலும் பொதுவான மின் மீட்டரை பொருத்தினாலே, மின் திறன் பயன்பாட்டு அளவை துல்லியமாகக் கணக்கிடலாமே!
இருப்பினும் முதல்வரும், மின்துறை அமைச்சரும் மின் மீட்டர் பொருத்தப்பட மாட்டாது என உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்த உத்தரவாதம் நீட் தேர்வுக்கு அளித்த உத்தரவாதம் போன்று நீர்த்து போகாமலிருக்க வேண்டும்" என்றார்.