

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பாக மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக விழுப்புரம் தாலுகா போலீஸார் பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பாக நேற்று (மே 24) மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் கூட்டம் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
144 தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதாக விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொல்லப்பட்ட பள்ளி மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறச்சென்ற தேமுதிக, பாஜக, காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் மீது தடை உத்தரவை மீறி கூட்டம் சேர்ந்ததாக திருவெண்ணை நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.