Published : 25 May 2020 08:41 AM
Last Updated : 25 May 2020 08:41 AM

அரசு அளிக்கும் ‘நீட்’ தேர்வு பயிற்சியால் 100 மாணவர்கள் மருத்துவம் படிக்க செல்வர்: அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

தமிழக அரசு அளிக்கும் நீட் தேர்வு பயிற்சியால் 100 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்வார்கள் என் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவிலேயே முதன்முறையாக குடிமராமத்து என்ற தூர்வாரும் பணியை கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. பவானி ஆற்றில் 4 தடுப்பணைகள் கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்புதல் பெறப்பட உள்ளது. ரூ.103 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் 1 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள், 3 கட்டப்பணிகளாக நடந்து வருகிறது. ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அரசு சார்பில் 472 மையங்களில் ஜூன் 2-வது வாரத்துக்கு பின்னர் தொடங்கும். ஏற்கெனவே ஜனவரி முதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 27 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அதில் 3,700 சிறந்த மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பெறும் மாணவர்களில் குறைந்தது 100 பேர் மருத்துவப் படிப்புக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையானவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து சூழ்நிலைக்குஏற்ப அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x