

சட்டவிரோதமாக செயல்படும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பல்வேறு நலத்திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்த அமைச்சர் கே.சி.கருப்பணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக-வில் ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் செய்த தவறால், அப்பதவி நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வேறு பதவி வழங்கப்படும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் வீடு திரும்பும் வகையில் தமிழக அரசு சிகிச்சை அளித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக தற்போது சாயத்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஆலைகள் செயல்படுகிறதா என்பதையும், சாயக்கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கிறதா என்பதையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் சாயகழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீதும், சட்ட விரோதமாக செயல்படும் ஆலைகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.