

முப்படைகளில் அவில்தார் பொறுப்பில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு புதியதாக வீடு கட்ட, புதியதாக வீடு வாங்க ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முப்படைகளில் அவில்தார் மற்றும் அதற்கு இணையான படைத்தளம் வரையிலான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது கைம்பெண்களுக்கு மற்றும் போர் விதவையர் அல்லது போரில் ஊனமுற்றோர் அனைத்து தரப்பினரும் 2020-2021-ம் நிதியாண்டு முதல் வங்கிக் கடன் பெற்று சொந்தமாக புதிய வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து சொந்த வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பெற்றவராக இருத்தல் வேண்டும். நிரந்தர மறு வேலைவாய்ப்பு பெற்றவராக இருத்தல் கூடாது.
இம்மானியம் புதியதாக கட்டப்படும், வாங்கப்படும் புதிய வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், விவரங்களுக்கு 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.