

ஊரடங்கால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மூடப்பட்ட மதுக்கடைகள் 62 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகின்றன.
கரோனா ஊரடங்கால் மார்ச் 25-ம் தேதி முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நான்காம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. புதுச்சேரியிலும் கடந்த 20-ம் தேதி திறக்கப் படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதற்கான கோப்பு ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பலமுறை திருப்பி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆளுநர் கூறிய பல திருத்தங்களுடன் மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டதையடுத்து புதுச்சேரி, காரைக்காலில் கரோனா வரியுடன் மதுபானங்களை விற்க ஆளுநர் கிரண்பேடி நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையே மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவாக உள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கு ஏற்றாற்போல் உள்ள மதுபானங்களுக்கு ஒரேமாதிரி விலையை நிர்ணயம் செய்து அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினோம். அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
ஆளுநர் ஒப்புதல் அளித்ததை யடுத்து 62 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. சாராய, கள்ளுக் கடைகளும் இன்று முதல் இயங்கும். கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 102 கடைகள் திறக்கப்படாது. புதுச்சேரி, காரைக்காலில் மதுவுக்கு 25 சதவீதம் கலால் வரி உயர்த் தப்பட்டுள்ளது. சாராயத்துக்கு 20 சதவீதம் கரோனா வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கள்ளுக்கு கரோனா வரி இல்லை.
அதே நேரத்தில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் மதுக்கடை உரிமையாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திங்கள்கிழமை(இன்று) முதல் திறக்கப்படும் மது, சாராய, கள்ளுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். மதுக்கடைகளில் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்துவந்தால் மட்டுமே மது வழங்கப்படும்.
கரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு இணையாக மது விலை இருக்கும். இந்த வரி 3 மாதங்களுக்கு அமலில் இருக் கும் என்றார்