

பொதுப் போக்குவரத்து இல்லாத ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகள், புகார்களை தெரிவிக்க தொடர்புடைய காவல் நிலையங் களுக்குச் சென்றும், காவல் துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித் தும் மனு கொடுக்க மிகவும் சிரமப் படுகின்றனர்.
குறிப்பாக திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் டிஎஸ்பி, எஸ்பி ஆகியோரிடம் மனு அளித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் டிஐஜி-யை சந்திக்க வேண்டுமெனில் தங்களது மாவட்டத்தில் இருந்து ஆன் லைனில் இ-பாஸ் பெற விண்ணப் பித்து, அதன்மூலம் திருச்சிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இதுபோன்ற காரணங்களுக்கு இ-பாஸ் கிடைப்பது அரிதாக இருப்பதால், பாதிக்கப்படும் மக்கள் மிகுந்த துயரத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதுதவிர, கரோனா வைரஸ் பரவும் சூழலில், தேவையற்ற பயணம் மேற்கொள்வது பாது காப்பற்றதாகவும் உள்ளது.
எனவே, இந்த 5 மாவட்ட மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை ‘கூகுள் மீட்’ செயலி மூலம் காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளை கேட்க டிஐஜி வே.பாலகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
இதன்மூலம் டிஐஜி-யிடம் புகார் தெரிவிக்க விரும்புவோர் முதலில் 0431 2333909 என்ற தொலைபேசி எண்ணில் டிஐஜி அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பெயரை பதிவு செய்யும் நபர்களிடம் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காணொலிக் காட்சி வாயிலாக டிஐஜி குறைகளை கேட்டு வருகிறார்.
கடந்த மே 22-ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல் நாளில் கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் தங்களது குறைகள் மற்றும் புகார்களை டிஐஜி-யிடம் தெரிவித்தனர். அவற்றை குறிப்பெடுத்துக் கொண்ட டிஐஜி, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து கேட்டபோது, டிஐஜி வே.பாலகிருஷ்ணன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
ஊரடங்கு அமலில் உள்ள இக்காலகட்டத்தில், பொது மக்களின் சிரமங்களை தவிர்க்க திருச்சி சரக காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு புதுமையான நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் என்னைச் சந்திப்பதற்காக பல கி.மீ தொலைவைக் கடந்து வர வேண்டிய சிரமம், அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் நேரம், செலவு மிச்சமாகும்.
‘கூகுள் மீட்’ மூலம் என்னிடம் பேசுவதற்காக பதிவு செய்வோரின் குறைகளை முன்கூட்டியே எனது அலுவலகத்தினர் கேட்டு, அவற்றை தொடர்புடைய மாவட்ட தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். அப்போது நடைபெறும் விசாரணையிலேயே பலரது குறைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுகிறது.
‘கூகுள் மீட்’ மூலம் பேசுவதற்கான கணினி, செல்போன் வசதி இல்லாதவர்களுக்கு அந்தந்த பகுதி காவல் துறையினரால் இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் தொழில்நுட்பம் தந்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அ.வேலுச்சாமி