

இ.ராமகிருஷ்ணன்
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அதிகாலை நேரம், அடையாறு பேருந்து பணிமனை அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கொசு கடிக்கு மத்தியில் தூக்கக் கலக்கத்தில் இருந்துள்ளார். அங்கு ரோந்து வந்த அடையாறு காவல் நிலைய போலீஸார் மூதாட்டியை எழுப்பி, கரோனா வைரஸ் பிரச்சினையைக் கூறி, அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
செய்வதறியாது திகைத்த மூதாட்டி, அங்கு வந்த பெண் காவலர் மரிய புஷ்ப மேரியின் கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டு, ‘‘அம்மா எனக்கு யாரும் இல்லை. எங்கு செல்வதென்றே தெரியவில்லை’’ என்று கண்ணீர் வடிய தழுதழுத்த குரலில் கூறியுள்ளார். இதை பெண் காவலர் சற்று கூட எதிர்பார்க்கவில்லை. எனினும், ‘‘அம்மா நீங்கள் யார்? எந்த ஊர்? உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது. என் வீட்டுக்கு வர விருப்பமா?’’ என்று கேட்டுள்ளார். சம்மதம் தெரிவித்த மூதாட்டியை காவல் வாகனத்திலேயே சூளைமேட்டில் உள்ள தனது வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பெண் காவலர் மரிய புஷ்ப மேரி.
இதுகுறித்து பேச மறுத்த பெண் காவலர் மேரி, தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு கூறியதாவது: திண்டுக்கல் எனது சொந்த ஊர். நானும், எனதுசகோதரியும் வேலை தேடி சென்னை வந்தோம். உறவினர்கள் கூட உதவவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே உணவு, தங்கும் இடம்இன்றி பசியால் தவித்துள்ளேன். அப்போதுதான், நம்மை போல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அன்று முடிவெடுத்தேன். தற்போது, காவலராக பணியில் சேர்ந்த பின்னர் கூட சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவளிப்பது, தேவையான உதவிகள் செய்வது, பரிதவிக்கும் புகார்தாரர்களுக்கு ஆறுதல் கூறுவது என எனது செயல் தொடர்ந்து வருகிறது. தற்போது கரோனாவின் போதும் பலருக்கு உணவளித்து உதவி வருகிறேன்.
இந்நிலையில்தான் அடையாறில் மூதாட்டி தனலட்சுமியை (63)சந்தித்தேன். கரோனா பிரச்சினை இருப்பதால் அவரை தொண்டு நிறுவனத்தில் சேர்த்துவிடு என்று எனது பணி தோழிகள் எச்சரித்தனர். ஆனால், கரோனா பயத்தால் மூதாட்டியை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.கடைசியில் என் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டேன். எனது தாயார் தனமேரி. தற்போது இவரும் எனக்கு தாய் போன்றவர்தான்.
மூதாட்டியின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள கழிஞ்சம்பாடி கிராமம். அவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனராம். பேத்தி ஒருவர் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துள்ளார். சிகிச்சைக்காக ஏற்பட்ட கடனை அடைக்க பூந்தமல்லியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ரூ.6 ஆயிரம் சம்பளத்தில் சமையல் வேலை செய்துள்ளார்.
அந்த விடுதி தற்போது மூடப்பட்டுவிட்டது. பேருந்து இல்லாததால் சொந்த ஊர்செல்ல முடியவில்லை. பணமும் இல்லாததால் தன்னார்வலர்கள் கொடுத்த உணவு, பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு வந்துள்ளார். கரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், மூதாட்டி தனலட்சுமி ஊருக்கு போக நினைத்தால் அனுப்பி வைப்பேன். இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சிதான்.
இவ்வாறு காவலர் மரிய புஷ்ப மேரி புன்னகையுடன் கூறினார்.
தற்போது சீருடை (காவல்) பணியில் இருப்பதால் புகைப்படம் வெளியிட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.