Published : 24 May 2020 09:46 PM
Last Updated : 24 May 2020 09:46 PM

மும்பையிலிருந்து பசியுடன் சென்னை திரும்பிய தமிழர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று சொந்த செலவில் உணவளித்த ஆந்திர போலீஸார்

மும்பையிலிருந்து ரயிலில் சென்னை திரும்பும் தமிழர்கள் உணவின்றி பசியுடன் வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, ஆந்திர போலீஸாரிடம் சென்னை காவல் ஆணையர் உணவுக்காக பேசிப் பணம் தருவதாகக் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத ஆந்திர போலீஸார் தங்கள் சொந்த செலவிலேயே உணவு தயாரித்து 1,500 பேருக்கு வழங்கினர்.

கரோனா ஊரடங்குத் தளர்வை அடுத்து வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்கள் தமிழகம் திரும்புகின்றனர். இவ்வாறு 1,500 தமிழர்கள் நேற்று (மே 23) இரவு மும்பையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு இன்று ( 24.05.2020) காலை வரை உணவு இருந்தது.

மதியம் ஆந்திர மாநிலம் வழியாக வரும் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு வாய்ப்பில்லையென சென்னையிலிருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்துக்குத் தகவல் வந்தது. யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் முழித்த அவர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஞாபகத்துக்கு வர உடனடியாக அவர் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றனர்.

வரும் நபர்களின் எண்ணிக்கை, என்ன வகையான உதவி தேவை என்பதைக் கேட்டு அறிந்துகொண்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மதிய உணவு நேரத்தில் அந்த ரயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள குண்டக்கல் ரயில் நிலையத்திற்கு வரும் என்பதை அறிந்து எஸ்.பி. சத்திய ஏசு பாபு, ஐபிஎஸ் அதிகாரியைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.

ரயிலில் பசியுடன் வரும் 1,500 தமிழர்களின் நிலை குறித்து விளக்கி அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? என்றும், அவ்வாறு வழங்குகின்ற உணவிற்கான பணத்தினை தாமே அனுப்புவதாகவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். இத்தகவலை அனந்தபூர் மாவட்ட குண்டக்கல் எஸ்.பி., ஆந்திர மாநில டிஜிபி தாமோதர் கவுதம் சவாங்கிடம் தெரிவித்தார்.



தகவலறிந்த ஆந்திர டிஜிபி, உணவில்லாமல் ரயிலில் பயணம் செய்யும் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இது. அதனால் நாமே உணவினை நம் சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்யலாம் என்றார். 1,500 தமிழ்ப் பயணிகளுக்கும் பிரியாணி, சீரக அரிசி சாதம் மற்றும் கலவை சாதங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பன் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை இன்று மதியம் 3 மணிக்கு அனந்தபூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த தமிழர்களுக்கு வழங்கினார்.

உணவினைப் பெற்றுக் கொண்ட பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கும், ஆந்திர மாநில டிஜிபி தாமோதர் கவுதம் சவாங்குக்கும், அனந்தபூர் மாவட்ட குண்டக்கல் எஸ்.பி. சத்திய ஏசு பாபு மற்றும் தொண்டு நிறுவனத்துக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆந்திர மாநில போலீஸார் செய்த மனிதாபிமான உதவிக்கு காவல் ஆணையரும் ஆந்திர டிஜிபியிடம் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x