Published : 24 May 2020 08:58 PM
Last Updated : 24 May 2020 08:58 PM

சென்னையில் தொற்றுள்ளவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்: கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசைப் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும், கபசுரக் குடிநீர், முகக்கவசங்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2,000 குடிசைப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பில் 2,500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அண்ணாநகர் மண்டலம், வார்டு 100, நடுவங்கரை குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சியுடன் இணைந்து ஹெல்ப் அ சைல்ட் ஆஃப் இந்தியா (Help a Child of India) எனும் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று (24.05.2020) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி நேரடியாக தனி நபர் விலகல், முகக்கவசம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நடுவங்கரையில் பொதுமக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணியினாலான முகக்கவசங்கள், கபசுரக் குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளோம்.

தமிழக அரசின் சார்பாக பொதுமக்களைக் கேட்டுக்கொள்வது என்னெவென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே கரோனா தொற்று வருவதை பெரும்பாலும் தடுத்துவிடலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்க உட்பட்ட பகுதிகளில் நுண்அளவில் கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை வைரஸ் தொற்று பாதித்த நபர்களில் 4,043 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

50 சதவீதத்தினர் குணமடைந்தாலும் என்ன வெளியில் பேசப்படுகிறது. இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இவ்வளவு பேர் இற்ந்து போனார்கள் என்றுதான் பேசப்படும். அதைத் தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கட்டுபடுத்தப்பட்ட பகுதி 527 ஆக உள்ளது”.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x