

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி புதுக்கிராமம் முஹமது சாலிகாபுரத்தில் உள்ள மசூதியில் அமைச்சர் தனது சொந்த செலவில் வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை இஸ்லாமிய மக்களுக்கு வழங்கினார்.
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செல்வலட்சுமி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சுமார் 800 மாணவ மாணவியர்களின் குடும்பங்களுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
பள்ளி செயலாளர் சண்முகசுந்தரம் பள்ளி கல்வி குழு தலைவர் பாலசுப்ரமணியன், சங்க பொருளாளர் பாபு பிரேம்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு புதுக்கிராமம் முஹமது சாலிகாபுரத்தில் உள்ள மசூதியில் அமைச்சர் தனது சொந்த செலவில் வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை இஸ்லாமிய மக்களுக்கு வழங்கினார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 89 இசைக்கலைஞர்கள், 11 பந்தல் தொழிலாளர்களுக்கு அமைச்சர் தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நான் யாரையும் புறக்கணிக்கவில்லை. என்னிடம் திமுகவினர் கோரிக்கை மனு வழங்கினர். அதனை பெற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதிலும் அரசியல் சாயம் பூசி, அவர்களாக ஒரு கருத்தைச் சொன்னதால், அதற்காக அவர்களே முன்வந்து முன்ஜாமீன் கேட்கிறார்கள் என்றால் குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்பதுதான் அர்த்தம்.
கரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கக் கூடாது என தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
இன்றைக்குள்ள நிதி நெருக்கடியிலும், அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என செயலாற்றி வருகிறார்.
இதற்கிடையே மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என தமிழக முதல்வர் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
இது அவர் தமிழக மக்கள் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை காட்டுகிறது. தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையையும் கேட்டுப் பெறுவதில் முதல்வர் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார், என்றார் அவர்.