விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.12.22 லட்சம் வழங்கிய சக காவலர்கள்

விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு ரூ.12.22 லட்சம் வழங்கிய சக காவலர்கள்
Updated on
1 min read

விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் ரூ.12 லட்சத்து 22 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலி வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி பத்மாவதி. பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.

சரவணன் தற்போது குடும்பத்துடன் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் வருகிறார். சரவணனின் மூத்த மகள் பவித்ரா (22) சென்னை ஆயுதப்படை பிரிவு போலீஸில் பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கிருந்து பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான மேல அரியப்பபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தென்காசி மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மற்றும் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க பவித்ரா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பெண் காவலர் பவித்தாவுடன் 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்றிணைந்து நிதி உதவி வழங்க முன்வந்தனர். அதனைத் தொடர்ந்து தங்களது சம்பளத்தில் இருந்து 12 லட்சத்து 22 ஆயிரத்து 955 ரூபாய் நிதி திரட்டினர்.

சென்னையில் இருந்து அவருடன் பணிபுரிந்த 2 காவலர்கள் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் பவித்ராவின் பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு வந்து அவரது தந்தை சரவணன், தாயார் பத்மாவதி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அந்த நிதியை வழங்கினர். மேலும், பவித்ரா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in