

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 4000 மெகாவாட் அளவுக்கு மின் தேவை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மின்சார தேவையும் அதிகமாக இருக்கும். மே மாதத்தில் மின்சார தேவை சராசரியாக16 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கோடை காலத்திலும் மின்சார தேவை குறைவாகவே இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தமிழகத்தின் மின் தேவை 9,750 மெகாவாட்டாக இருந்தது.
இந்நிலையில் மே மாதம் 4-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் மின்சார தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மே 3-ம் தேதி 11,294 மெகாவாட்டாக இருந்த மின்தேவை மே 8-ம் தேதி 12,834 மெகாவாட்டாக உயர்ந்தது.
இதுவே மே 15-ல் 13,419 மேகாவாட்டாக அதிகரித்தது. ஊரடங்கு தளர்வு மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக மின்சார தேவை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று தமிழகத்தின் மின் தேவை 13,896 மெகாவாட்டாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4000 மெகாவாட் அளவுக்கு மின்சார தேவை அதிகரித்துள்ளது.
தற்போது பல்வேறு தொழில்பேட்டைகளை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, வரும் நாட்களில் மின்சார தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தி தேவையான அளவில் இருப்பதால் பற்றாக்குறை ஏதும் ஏற்படாது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.