

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இளைஞர்களின் முயற்சியால் குளத்தில் தொட்டி அமைத்து, தண்ணீர் ஊற்றி கால்நடை மற்றும் பறவைகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது.
கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சார்பில் பெரியகுளம் உள்ளிட்ட குளங்களை கடந்த ஆண்டில் இருந்து தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருவதோடு, மரக்கன்றுகளையும் நட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குளங்களில் தேங்கி இருந்த மழைநீரும் வற்றி வட்டதால் கால்நடைகள், பறவைகள் பரிதவித்து வந்தன. இதையறிந்த இளைஞர்கள், பெரியகுளத்தில் 2 இடங்களில் பள்ளம் வெட்டி தொட்டி அமைத்து தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வருகின்றனர். இதனால், கால்நடைகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரபு கூறியபோது, ''பெரியகுளத்தில் மேய்ச்சலுக்காக வந்து செல்லும் ஏராளமான ஆடு, மாடுகளோடு பறவைகளும் கூட்டம் கூட்டமாக வரும். குளத்தில் தண்ணீர் வற்றி விட்டதால் இவை தாகம் தீர்க்க முடியாமல் தவித்து வந்தன. இந்நிலையில், குளத்தில் 2 அடி நீளம், 5 அடி அகலம் மற்றம் 7 அடி ஆழத்தில் 2 இடங்களில் தரைமட்டத்தில் தொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதியில் சிமெண்ட் கலவை பூசப்பட்டுள்ளது. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது இத்தொட்டிகளையும் நிரப்பி விடுவதால் கால்நடைகள், பறவைகளின் தாகம் தீர்க்கப்படுகின்றன. இதையறிந்து நாளுக்கு நாள் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன'' என்றார்.