

விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 160 பேர் இன்று சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய பிஹாரைச் சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள் கடந்த வாரம் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, தற்போது விருதுநகர், ராஜபாளையம், ஆர்.ஆர். நகர் பகுதிகளில் சிமெண்ட் ஆலை மற்றும் பஞ்சாலைகளில் பணியாற்றி வந்த பிஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 160 தொழிலார்கள் இன்று மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
முன்னதாக, விருதுநகர் ரயில் நிலையத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத்தொடர்ந்து, அனைவருக்கும் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டு பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து பிஹாருக்கு சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.