Published : 24 May 2020 10:17 AM
Last Updated : 24 May 2020 10:17 AM

நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் 25% தொழிலாளர்களுடன் இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், நாளை முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவிகித தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

''ஜெயலலிதா அரசு, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைக்கென பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவிகித தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை.

நிபந்தனைகள்

* தினமும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேன்னர் மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
* சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
* சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* இது தவிர, பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஜெயலலிதா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x