Published : 24 May 2020 08:13 AM
Last Updated : 24 May 2020 08:13 AM

கலாச்சார பெருமைமிக்க மதுரை மாநகரில் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப் பூங்கா: காவியத்தில் விவரிக்கப்பட்ட மரங்களை கண்முன் நிறுத்திய எஸ்.பி.

கே.கே.மகேஷ்

கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப் பூங்காவை ஏற்படுத்தியதோடு, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட மரங்களையே அங்கு வளர்த்து அழகூட்டியிருக்கிறார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன். வரும் 1-ம் தேதி திறப்பு விழா காண்கிறது இந்த பூங்கா.

மதுரையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும், பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்த இலக்கியம் சிலப்பதிகாரம். மதுரையின் வீதிகள், அங் காடிகள், மாட மாளிகைகள் என்று அத்தனையையும் நுட் பமாகச் சித்தரித்திருப்பார் இளங் கோவடிகள். இந்தச் சிலப்பதி காரத்தையும், மதுரையையும் சிறப்பிக்கும் வகையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சுமார் 2 ஏக்கரில் சிலப்பதிகாரப் பூங் காவை உருவாக்கியிருக்கிறார் எஸ்.பி நெ.மணிவண்ணன்.

இப்பூங்கா குறித்து அவர் கூறியதாவது: பணி நிமித் தமாக வந்தபோது, கண்ண கியும், கோவலனும் வந்த மதுரைக்குள் நுழைகிறோம் என்ற பிரமிப்போடுதான் இந்த மாமது ரைக்குள் வந்தேன்.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இடங்களை எல்லாம் பார்த்தபோது, எஸ்பி அலுவலகம் அருகில்தான் கடச்சனேந்தல் என்ற ஊர் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.

கவுந்தியடிகள் கண்ணகி யையும், கோவலனையும் இந்த ஊரில் குடியமர்த்தியதாகவும், கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து கண்ணகி தனது கால் சிலம்பை ஏந்திய இடம் அதுதான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘கடை சிலம்பு ஏந்தல்' தான் கடச்சனேந்தல் என்று மாறி விட்டதாக ஆய்வாளர்கள் சொல் கிறார்கள்.

கணவன் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு கடச்சனேந்தலில் இருந்து மதுரைக்கு கண்ணகி நடந்து சென்ற பாதையில்தான் இந்த அலுவலகம் அமைந்திருக்கிறது என்றதும், இங்குள்ள காலியிடத்தில் சிலம்பதிகாரப்பூங்கா அமைப்பது என்று முடிவெடுத்தேன்.

பொய் சாட்சி சொல்லாதே, உயிர்க்கொலை நீக்கு, பிறன் மனைஅஞ்சுமின், கள்ளும் களவும் காமமும் கொள்ளாதே, அவசரப்பட்டு தீர்ப்பு சொல்லாதே போன்ற அறக்கருத்துக்களைச் சொன்ன நூல் என்பதால், இந்த இடத்துக்கு பொருத்தமான பூங்காவாக அது இருக்கும் என்று புலவர்கள் மு.சன்னாசி, வை.சங்கரலிங்கம் ஆகியோரும் கூறினார்கள்.

கடம்பு, வாகை, வாழை, பலா, மா, வேங்கை, புங்கை, மருது, மூங்கில், இலவ மரம் என்று அன்றைய மதுரையில் என்னென்ன மரங்கள் எல்லாம் இருந்ததாக சிலப்பதிகாரம் சொன்னதோ அதை எல்லாம் தேடிப்பிடித்து இங்கே வளர்த்திருக்கிறோம்.

பூங்கா நுழைவு வாயிலில் சிலப்பதிகார கதைச் சுருக்கத்தையும், பூங்காவுக்குள் ஆங்காங்கேமங்கள வாழ்த்துப் பாடலில் ஆரம்பித்து வரந்தரும் காதை வரையிலான 30 காதைகளின் சுருக்கத்தையும் கல்வெட்டாக வைத்திருக்கி றோம். நடுவில் பிரம்மாண்டமான கால் சிலம்பு சிற்பமும், பின்னணியில் கண்ணகி, கோவலன், மாதவி, சேரன் செங்குட்டுவன், கவுந்தி யடிகள், இளங்கோவடிகள் ஆகியோரின் ஓவியங்களையும் வரைந்துள்ளோம்.

இந்த பூங்காவின் திறப்பு விழாவை மாணவர்களையும், மதுரை மக்களையும், தலை வர்களையும் அழைத்து பிரம்மா ண்டமாக நடத்தலாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். ஆனால், கரோனா காரணமாக வரும் 1-ம் தேதி திறப்பு விழா எளிமையாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

"இந்தப் பூங்காவில் எந்த இடத்திலும் தன்னுடைய பெயரை எஸ்.பி. முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

தனது பதவி காலத்துக்குப் பிறகும் பூங்கா சிறப்பாக நிர்வகி க்கப்பட வேண்டும் என்று கருதி, அதனை பராமரிக்கும் பொறுப்பை டிவிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படை த்திருக்கிறார் எஸ்பி" என்கிறார்கள் காவல் துறையினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x