‘பெண் வன்கொடுமை சட்டத்துக்கு சமர்ப்பணம்’ கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

‘பெண் வன்கொடுமை சட்டத்துக்கு சமர்ப்பணம்’ கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
Updated on
1 min read

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் வேலாயுதம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் பிரபு(27). இவருக்கும், தாமினி என்பவருக்கும் திருமணமாகி 7 மாத கைக்குழந்தை உள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்துக்கொண்டு தாமினி, தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் கடந்த மே 20-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தாமினி குடும்பத்தினர் தாக்கியதில் பிரபுவின் தாய் மல்லிகாவின் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், பெண் வன்கொடுமை சட்டத்தில் புகார் கொடுத்தால் உங்கள் அனைவரையும் போலீஸார் சிறையில் வைத்துவிடுவார்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தி யவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிரபு கடந்த மே 21-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரபு இறந்தார்.

இதற்கிடையே பிரபு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் பிரபு தெரிவித்துள்ளதாவது:

திருமணம் ஆனதில் இருந்தே பெண் வீட்டார் மூலம் பல பிரச்சினைகள் வந்தன. என் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப் பட்டார். நான் பலமுறை அழைத்தும் என் வீட்டுக்கு வர மறுத்தார். இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது என் மனைவியின் உறவினர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மிரட்டினர். எனவே, என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு வழியின்றி தற்கொலை செய்கிறேன்.

நான் கோழை அல்ல. அப்பாவி ஆண்களுக்கு எதிரான, பெண் வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபுவின் தாய் மல்லிகா அளித்த புகாரின்பேரில், பிரபுவின் மனைவி தாமினி, இவரது தந்தை கருணாநிதி, உறவினர்கள் சந்திரா, அமுதா, உதயகுமார், தனலட்சுமி, ஜோதீஸ்வரன் ஆகியோர் மீது அரியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in