Published : 24 May 2020 07:41 AM
Last Updated : 24 May 2020 07:41 AM

மகிழ்விக்க வந்த இடத்தில் மக்களுக்கு சுமையாகி விட்டோம்; உணவளித்த மனிதநேயத்தால் உயிர் வாழ்கிறோம்: ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

எஸ்.கோபாலகிருஷ்ணன்

கரோனா வைரஸ் ஊரடங்கு பல துறைகளை பட்டினி நிலைக்கு தள்ளி வருவது அனைவரும் அறிந்ததே. இதில், குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களின் குழந்தைப் பருவத்தையும் மீட்டுக் குதூகலப்படுத்தி வந்த சர்க்கஸ் நிறுவனங்களும் அடங்கும்.

2001-ல் உச்ச நீதிமன்றம் சர்க்கஸ்களில் காட்சிப் பொருளாக விலங்குகளை பயன்படுத்தத் தடை விதித்ததால், அத்தொழில் 40 சதவீதம் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு, பாலகர்கள் பணியாற்றத் தடை என்றானதும் மேலும் அதி கரித்தது. எனினும், மத்திய, மாநில அரசுகள் அளித்துவரும் சில சலுகைகளால் அதன் கலைஞர்கள் பிழைத்து வருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் வெறும் 12 சர்க்கஸ் நிறுவனங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. இவர்களும் கரோனா ஊரடங்கால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் ஊரடங்கு காலத்தில் சிக்கியுள்ள ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ நிறுவனம் கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் 100 ஆண்டுகளை நிறைவு செய்த நிறுவனம் ஆகும்.

கடந்த பிப்.23-ம் தேதி மன்னார் குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்நிறுவனம் நிகழ்ச்சிகளைத் தொடங்கிய நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மார்ச் 17-ம் தேதி நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இந்நிறுவன ஊழியர்கள் 135 பேர் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், வயிற்றுப்பசியைப் போக்க கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சேவை சங்கத்தினர் இவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி ஆதரவு அளித்தனர். இவர்களின் நிலையை அறிந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வட்டாட்சியர், நகராட்சி நிர்வாகம் மூலம் உணவுப்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.

சர்க்கஸ் நிறுவன ஊழியர் களுக்கு மட்டுமல்லாமல், சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த ஒட்டகம், குதிரை, நாய்க்குட்டிகள், கிளி உள்ளிட்ட பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும் உணவளித்து தற்போதுவரை மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இதுகுறித்து ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ நிறுவன மேலாளர்கள் ரமேஷ், கே.பி.உன்னி ஆகியோர் கூறியதாவது:

எங்கள் சர்க்கஸ் நிறுவனத்தில் ஜார்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், அசாம், கேரளா, பஞ்சாப், ஹரியாணா மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 135 பேர் பணியாற்றுகின்றனர்.

புயல், மழை போன்ற இயற்கை பேரிடர் என்றால் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தோ அல்லது வேறு பகுதிக்கு சர்க்கஸ் முகாமை மாற்றியோ தொழில் நடத்துவோம். ஆனால், மக்களை மகிழ்விக்க வந்த இடத்தில் ஊரடங்கால் முடங்கி அந்த மக்களுக்கே சுமையாகிவிட்டோம். இந்த சுமையை இப்பகுதி மக்களும், அதிகாரிகளும் அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, செய்த பொருள் உதவியால் அன்றாட உணவுக்கு பஞ்சம் இல்லாமல் உயிர் வாழ்கிறோம். மனிதநேயத்துடன் உதவிய அனைவருக்கும் நன்றி.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சர்க்கஸ் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

மன்னார்குடியில் நாங்கள் செலுத்திய மின்சாரத்துக்கான வைப்புத் தொகை ரூ.65 ஆயிரத்தை திருப்பி வழங்குவதுடன், மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். ஊரடங்குக்குப் பின் தளவாடப் பொருட்களை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கான லாரி வாடகையை தந்து அரசு உதவ வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x