

தமிழகத்தில் எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் தவிர 4 வழித்தடங்களில் ஏசி வசதி இல்லாத விரைவு ரயில்களை இயக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் விரைவு, பயணிகள், மின்சார ரயில்களின் சேவை வரும் ஜூன் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் கடந்த 12-ம் தேதி முதல் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 200 விரைவு ரயில்களும் பல்வேறு வழித்தடங்களில் வரும் 1-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதில், தமிழகத்துக்கு எந்த ரயிலும் இடம் பெறவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 4 வழித்தடங்களில் ஏசி வசதி இல்லாத 4 விரைவுரயில்கள் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே மூலம் ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, தெற்கு ரயில்வே,ரயில்வே வாரியத்துக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில், ‘‘சென்னை எழும்பூர், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களைத் தவிர, மற்ற முக்கியரயில் நிலையங்களில் இருந்து விரைவு ரயில்களை இயக்க வேண்டும். அந்த வகையில், கோவை - மயிலாடுதுறை இடையே ஜன்சதாப்தி சிறப்பு ரயிலாகவும், மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில்,கோவை - காட்பாடி வழித்தடங்களில் இன்டர்சிட்டி சிறப்பு ரயில்களாகவும் இயக்க வேண்டுமென தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.