

வடதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 7 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் சித்தார், சேலம் மாவட்டம் எடப்பாடி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழக வடமாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு 106 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும். நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி, வேலூரில் 107, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 106,கரூர் பரமத்தியில் 105, சேலத்தில் 103, நாமக்கல்லில் 102, சென்னை விமான நிலையம், பாளையங்கோட்டையில் தலா 101, தருமபுரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.