

சென்னை தவிர மற்ற மாநகர, நகர, பேரூர் பகுதிகளில் இன்றுமுதல்முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்று தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
காலை 7 முதல் மாலை 7 மணி வரை
இதன்படி, ஏற்கெனவே ஊரகபகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்கள் கடந்த 19-ம் தேதி முதல்இயங்குவதற்கு அனுமதியளிக்கப் பட்டிருந்தது. தற்போது, பெருநகரசென்னை காவல்துறை எல்லைக்கு்உட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் மே 24 (இன்று) முதல் தினசரி காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கைகழுவும் திரவம் (சானிடைசர்) கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். முகக் கவசம் அணிவதை உறுதி செய்வதுடன், கடையின்உரிமையாளர் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுவதை உறுதி செய்ய வேண்டும். குளிர்சாதன வசதியை உபயோகப்படுத்தக் கூடாது. மேலும்இந்தக் கடைகளுக்கான விரிவானவழிமுறைகள் தனியாக வெளியிடப் படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது. சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.