Published : 24 May 2020 06:56 AM
Last Updated : 24 May 2020 06:56 AM

வாழ்வாதாரமின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி: வேலூர் இளைஞருக்கு முதல்வர் பாராட்டு

வேலூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களை தேடிச் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வரும் இளைஞரை அனைவரும் பாராட்டி வருவதுடன் தமிழக முதல்வரும் பாராட்டி உள்ளார். வேலூரைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் சரவணன், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வார இறுதி நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு நண்பர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவியுடன் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.

கரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒரு நாள் இடைவெளி இல்லாமல் தினசரி வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களை தேடிச் சென்று நிவாரண தொகுப்புகளை வழங்கி வருகிறார். நரிக்குறவர்கள், சாலையோர வியாபாரிகள், கரகாட்ட கலைஞர்கள், சைக்கிள் கடை தொழிலாளிகள், பீடி தொழிலாளர்கள், சைக்கிள் ரிக் ஷா தொழிலாளிகள் என அடையாளம் கண்டு ரூ.350 முதல் ரூ.500 வரையிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் இதுவரை 2,500 குடும்பங்களுக்கு நிவாரணபொருட்களை வழங்கியதுடன் தினமும் 130 பேருக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறார். பகல் நேரத்தில் அலுவலக பணியை வீட்டில் இருந்தே கவனித்தாலும் காலை 5 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபடுகிறார். ஊரடங்கு காலத்தில் இவரது பணியை தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டர் வழியாக பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து தினேஷ் சரவணன் கூறும்போது, ‘‘உதவி செய்வதற்காக நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. நான் செய்யும் பணியை தினசரி முக நூல் பக்கங்களில் பதிவேற்றி வருகிறேன். இதைப் பார்த்து நிறைய பேர் உதவி செய்ய முன்வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களை அடையாளம் கண்டு நானே நேரில் சென்று உதவுகிறேன். உணவு வழங்கும் பணியில் நண்பர்கள்இருவர் ஈடுபட்டுள்ளனர். அலுவலக வேலையை பகல் நேரத்தில் வீட்டில் இருந்தபடி கவனித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x