Published : 23 May 2020 07:46 PM
Last Updated : 23 May 2020 07:46 PM

சென்னையில் 1979 குடிசைப்பகுதிகளில் 2500 களப்பணியாளர்களுடன் இணைந்து தொற்று தடுப்புப்பணி: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1979 குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் 2,500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் பணிகளை தொடங்குவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 125, நொச்சிநகர் பகுதியில் மாநகராட்சியுடன் இணைந்து டான் பாஸ்கோ அன்பு இல்லம் எனும் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையாளர் பிரகாஷ் இன்று (23.05.2020) பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று 33 முதல் 36 வார்டுகளில் மட்டும் சற்று அதிகமாக காணப்படுகிறது. 164 வார்டுகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் முதல்வர் உத்தரவின்படி, நுண்அளவில் கண்காணித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வைரஸ் தொற்று பாதித்தப் பகுதிகளில் 97 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 2500 கள பணியாளர்களை கொண்டு வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையிலுள்ள 1979 குடிசை வாழ்ப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அணுகி வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான அடிப்படை ஒழுக்கங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மறுபயன்பாடுடன் கூடிய துணியால் ஆன முகக் கவசங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வீடுகள் தோறும் சென்று வழங்குவார்கள். எளிதில் நோய்வாய்படக் கூடிய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 8 லட்சம் நபர்கள் உள்ளனர். இதில் சுமார் 2 லட்சம் நபர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் நலன் குறித்தும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் கொண்டு சேர்க்க உதவி செய்வார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சை பெறும் சுமார் 1.75 லட்சம் நபர்களின் பட்டியல் மருத்துவர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கி அவ்வப்போது அவர்கள் உடல்நிலை குறித்து கேட்டறிவார்கள். இந்த பணிகள் சென்னையிலுள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது”.

என ஆணையர் பிரகாஷ், தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x