

பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் சாதி, மதம் குறித்து பேசினால் அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இப்படிப்பட்ட கருத்துக்களை கூறும்போது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுப்பது வழக்கம். அவர் செய்த தவறை திசைதிருப்ப ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்துகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கரிசல்குளத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் ரூ.25 லட்சத்தில் இன்று குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குடிமராமத்து திட்டத்தில் கண்மாயை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
இதேபோல், காளாம்பட்டி ஊராட்சி அழகப்பபுரத்தில் 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொது பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் ரூ.30 லட்சத்தில் தூர்வாரும் பணி தொடங்கி வைத்தார்.
பின்னர் கட்டாலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டியில் இருந்து ஆவுடையம்மாள்புரம் பேருந்து நிறுத்தம் வரையிலான 2.2 கி.மீ தூரம் வரை ரூ.52.36 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கயத்தாறு அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ஆத்திகுளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் பத்மா, உதவி நிர்வாக பொறியாளர் மணிகண்ட ராஜா, உதவிப் பொறியாளர் பிரியதர்ஷினி, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, காளாம்பட்டி ஊராட்சி தலைவர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி எதற்கு கைது செய்யப்பட்டார். அவர் மீது என்ன வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ஊடக துறையினரையும் பத்திரிகையாளர்களையும் எவ்வளவு இழிவாக, சாதி பற்றி பேசினார் என்பது தெரியும்.
பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் சாதி, மதம் குறித்து பேசினால் அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இப்படிப்பட்ட கருத்துக்களை கூறும்போது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுப்பது வழக்கம். அவர் செய்த தவறை திசைதிருப்ப ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்துகிறார், என்றார் அவர்.