

கோவில்பட்டியில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் வசித்து வரும் 55 வயது நகராட்சி பெண் துப்புரவு பணியாளருக்கு கடந்த 19-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று அவரது பேத்தி, பேத்தியின் கணவர் மற்றும் அவர்களது 5 மாத குழந்தை ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பிருந்து ஸ்டாலின் காலனி பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அறிவிக்கப்பட்ட கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டாலின் காலனி பகுதியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை கூறி திடீரென தடுப்புகளை தாண்டி வெளியேறினர்.
தகவலறிந்து நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீஸார் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் விரைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.