

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று நீரின் நிறம் மாறியதற்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தாமிரபரணி தண்ணீர் கலங்கலாகவும், நிறம் மாறியிருப்பதும் குறித்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்று நீர் நிறம் மாறி வருவதாக எழுந்த பிரச்சினை தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர், நகராட்சி ஆணையர் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆகியோர் கூட்டாக புலத்தணிக்கை மேற்கொண்டனர்.
கடந்த 11-ம் தேதி சேர்வலார் அணையின் நீர்மட்டம் மின்உற்பத்தி செய்வதற்கு உண்டான குறைந்தபட்ச அளவுக்கு கீழ் சென்றதால், சேர்வலார் அணையின் நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
அப்போது பொதுப்பணித்துறையின் நீர்தேவை 200 கனஅடியாக இருந்ததால் அதை பூர்த்தி செய்ய காரையார் அணையின் நீர் வெளியேற்றம் 150 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
நீர் தேவை 400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டதால் கடந்த 15-ம் தேதி காலை 5 மணியிலிருந்து காரையார் அணையின் நீர் வெளியேற்றம் 150-ல் இருந்து 350 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
குடிநீர் தேவைக்காகவும், விவசாய தேவைக்காகவும், காரையார் அணையின் அடிப்பகுதியிலுள்ள மதகிலிருந்து நீர் திறந்துவிடப்படுவதால், அணையின் கீழ்பகுதியில் சேர்ந்துள்ள சகதி. மண், இலைதழைகள் மற்றும் மட்கிப்போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் ஆற்றுநீரை பரிசோதனை செய்ததில் ரசாயன கழிவுகள் ஏதும் கலக்கவில்லை என்பது தெரியவருகிறது. தற்போது அதிகளவிலான நீர் வெளியேற்றம் காரணமாக மீண்டும் தாமிரபரணி நீரின் நிறம் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.
மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் பாபநாசம் அணை முதல் சீவலப்பேரி வரையிலுள்ள பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள ஆற்றுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகளுக்குப்பின் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை:
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் தற்போது தண்ணீரின் நிறம் மாறி மஞ்சளாகவும், கலங்கலாகவும் வருவதாக தெரிகிறது.
மாநகராட்சியிலுள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்தும் விநியோகம் செய்யப்படும் குடிநீரானது, குளோரினேஷன் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.