

சென்னையில் 200 வார்டுகளில் பெருமளவில் கட்டுப்படுத்திவிட்டோம். 33லிருந்து 36 வார்டுகள் குடிசைப்பகுதிகள் சவாலாக உள்ளது.அதையும் கட்டுப்படுத்திவிடுவோம் என்று கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்,
சென்னையில் குடிசைப்பகுதிகளில் தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம், நோய்த்தடுப்பு நடவடிக்கை தொடக்க நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
“நொச்சி நகர் பகுதியில் தொண்டு நிறுவனம் மூலமாக 97 தொண்டு நிறுவனங்கள் மூலமாக களத்தில் இறங்கி பணியாற்ற உள்ள தகவல் குறித்து மாநகராட்சி ஆணையர் சொல்வார். சென்னையைப்பொருத்தவரை ஒரு அச்சம் தினசரி எண்ணிக்கையை வைத்து இருக்கும். சில நல்ல செய்திகளை நான் சொல்கிறேன். தற்போது தொற்றுள்ளவர்கள் மொத்த எண்ணிக்கை 1461 இன்று மாலை வரும் எண்ணிக்கை தனி. இதுவ்ரை சுகாதாரத்துறை தகவல்படி 3791 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
நம்முடைய மரண விகிதத்தை .70 என்கிற அளவில் குறைவாக பராமரித்து வருகிறோம். ஏற்கெனவே நோய் எண்ணிக்கை இரட்டிப்பாவதை கண்காணித்து குறைத்து வருகிறோம். போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் களப்பணியாளர்களை அளித்து முதல்வர் உதவுகிறார். சுகாதாரத்துறையிலிருந்து 500 சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடமும் நிரப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சொன்னபடி ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூரில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அங்கு எங்கள் நோக்கம் என்னவென்றால் அங்கு வரக்கூடிய நோய்த்தொற்றுள்ளவர்கள் காண்டாக்டை எடுத்து சோதனை செய்து உடனடியாக தடை செய்ய முயற்சிப்பது.
நமக்கு சவாலாக இருப்பது ராயபுரம், யானைக்கவுனி, பெரியமேடு, கிருஷ்ணாம்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் கோயம்பேடு மொத்த தொற்று காரணமாக நோயுற்றவர்கள் வருகின்றனர். அதை தீவிரமாக கண்காணித்து சரி செய்கிறோம்.
குடிசைப்பகுதிகளில் 2000 பகுதிகளை கண்டறிந்து கண்காணித்து குறிப்பாக தொற்றா நோய்களை கணக்கெடுத்து கபசுர குடிநீர் வழங்குவது, முகக்கவசம் உள்ளிட்டவற்றை சாதாரண மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
முக்கியமாக நோய்க் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருக்கவேண்டிய ஒழுக்க நடைமுறை. பொதுவாக மாலையில் வரும் எண்ணிக்கை பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அது நியாயமானதுதான் ஆனால் ஏன் வருகிறது. அதை நாம் கவனிக்கணும். குறிப்பாக சென்னையில் 33 லிருந்து 36 வார்டுகள் உள்ளேயே வீட்டுக்குள்ளேயே வருகிறது.
அதை தேடிப்போய் டெஸ்ட் எடுக்கிறோம். இன்றுகூட 3862 சோதனை எடுத்துள்ளோம். டெஸ்ட் எடுக்க காரணம் என்ன எண்ணிக்கை அதிகமானாலும் இவர்கள் மூலம், நோய்ப்பரவாமல் தடுக்க வேண்டும். இந்த 36 வார்டுகளில் முக்கக்கவசம் அணியும் பழக்கத்தை கட்டாயமாக அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 97 தொண்டு நிறுவனங்களை இறக்கியுள்ளோம்.
டெக்னிக்கலாக நாங்கள் சொல்வது முழு ஒத்துழைப்புடன் அந்த நபர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்கிற அளவில் காண்டாக்ட் சேஸிங் செய்கிறோம். இதைவிட குடிசைப்பகுதிகளில், டெல்லி, மும்பை, புனே, சென்னை, நாசிக் போன்ற குடிசைப்பகுதிகளில் வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன குறிப்பாக சில ஏரியாக்களில் 50 சதுர அடிகளில் 7,8 பேர் வசிக்கின்றனர்.
இங்கு முகக்கவசம் கட்டுப்பாடு மிக முக்கியம். பலரும் நமக்கு வராது என்கிற எண்ணத்தில் அரசு சொல்லும் நடைமுறைகளை பின்பற்றாமல் உள்ளனர். அதனால் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் முதல்வர் சொல்வது, அரசு சொல்வது, நாங்கள் வேண்டுகோளாக வைப்பது என்னவென்றால் இடைவெளியை பராமரியுங்கள், முகக்கவசத்தை கட்டாயம் அணியுங்கள் என்பதே”.
இவ்வாறு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேசினார்.