

ஐந்து ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டு அதிக விளைச்சல் இருந்தும் போக்குவரத்து தடை மற்றும் பல்வேறு காரணங்களால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்டதால் நிலத்தில் வீணாக விடுவதை விட மக்களுக்கு தர்பூசணி பழங்களை இலவசமாக விவசாயி செந்தில்குமரன் விநியோகித்து வருகிறார். இதுவரை 15 டன்னுக்கு மேல் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதில் கரும்பு உற்பத்தி என்பது சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடந்ததற்கு காரணம் புதுச்சேரி அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலை. ஆனால் நஷ்டத்தின் காரணமாக கரும்பு ஆலை 4 ஆண்டுகளாக இயங்கவில்லை. கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு 13 கோடி ரூபாய் பாக்கியை ஆலை நிர்வாகம் வைத்துள்ளது.
இதற்கு மேல் ஆலையை நம்ப முடியாது என பல விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை தவிர்த்து மரவள்ளி, நெல் என மாற்று பயிருக்கு மாறி விட்டனர்.
இதில் சந்தை புதுக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமரன், கரும்புக்கு மாற்றாக கோடையில் விற்பனையாகும் என தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பயிரிட்டார். நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைக்கவில்லை. இதையடுத்து பழங்களை பறித்து டிராக்டரில் ஏற்றி வந்து கிராம மக்களிடம் கடந்த வாரம் முதல் விநியோகித்து வருகிறார்.
இதுதொடர்பாக செந்தில்குமரன் கூறுகையில், "கரும்பு விவசாயியாக இருந்தேன். கரும்பு பயிரிட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி பணம் வராமல் காத்துள்ளோம். தற்போது மாற்றுபயிராக தர்பூசணி 2-ம் ஆண்டாக பயிரிட்டேன். ஏக்கருக்கு 12 டன் விளையும் ஐந்து ஏக்கருக்கு 60 டன் வரை நன்றாக விளைச்சல் இருந்தது.
வழக்கமாக, 1 டன் ரூ.15 ஆயிரம் விலை போகும். கரோனாவால் ரூ.3,500-க்கு தான் கேட்டனர். கொஞ்சம் விற்றோம். சிறு வியாபாரிகளுக்குத் தந்தோம். கரோனாவால் வந்த வியாபாரிகளும் மிகவும் குறைந்த விலைக்குதான் கேட்டார்கள். அப்படியே நிலத்திலேயே விட்டு விடுவதை விட இருக்கும் பழங்களை என்ன செய்யலாம் என யோசித்தேன்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு நொந்து போயிருக்கும் மக்களுக்கு இலவசமாக தரும் எண்ணம் வந்தது. அதையடுத்து, கடந்த வாரத்திலிருந்து டிராக்டர் வண்டியில் பழத்தை எடுத்து வந்து எங்கள் ஊரை சுற்றியுள்ள மக்களுக்கு இலவசமாக தர ஆரம்பித்தோம்.
இதுவரை மண்ணாடிப்பட்டு, சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டி பாளையம் என தந்துள்ளேன். இதுவரை 15 டன்னுக்கு மேல் வரை தந்திருப்பேன். மீதியிருக்கும் பழத்தையும் தந்து முடிச்சிடுவேன்" என்கிறார் இயல்பாக.