Published : 23 May 2020 04:08 PM
Last Updated : 23 May 2020 04:08 PM

மதுரையில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை: ஒரு பயணிக்கு மட்டுமே அனுமதியால் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிருப்தி 

ஒரே ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற அரசின் கட்டுப்பாட்டால் இன்று அனுமதி வழங்கியும் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன.

ஆனால், இன்று மிகக் குறைவான எண்ணிக்கையிலே ஆட்டோக்கள் இயங்கின. அரசு அனுமதி வழங்கியும் ஆட்டோக்களை இயக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு அரசின் கட்டுப்பாடுகள்தான் முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது.

காலை 7 மணி மாலை 7 மணி வரை இயக்க வேண்டும். ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை கிருமி நாசினியை கொண்டு ஆட்டோவை சுத்தம் செய்ய வேண்டும். பயணியும், ஆட்டோ டிரைவரும் முககவசம் அணிய வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இதில், ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ய அனுமதி என்பதை ஆட்டோ டிரைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், ஆட்டோக்கள் மிகப்பெரிய அளவில் இயக்கப்படும் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பெரியார் பஸ்நிலையம் போன்ற பகுதியில் மிக குறைந்த எண்ணிக்கையிலே இன்று ஆட்டோக்கள் இயங்கின.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் பாண்டி கூறுகையில், ‘‘ஆட்டோக்கள் இயக்க அனுமதித்தாலும் பொதுமக்கள் வந்தால்தான் ஓட்ட முடியும். பொதுமக்கள் இன்னும் வெளியே வர ஆர்வம் காட்டவில்லை. ஆட்டோ ஓட ஆரம்பித்தால் நாங்களே சானிடைசர் வாங்கி ஆட்டோவை சுத்தம் செய்து கொள்வோம்.

ஆனால், தற்போது ஒட்டமே இல்லாததால் அரசு சானிடைசர் வாங்க உதவ வேண்டும். ஒருவர் மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை செயல்படுத்த வாய்ப்பே இல்லை. ஒருவர் மட்டும் வருவதாக இருந்தால் அவர்கள் பைக்கில் சென்றுவிடுவார்கள்.

இருவர், மூவர் செல்வதாக இருந்தால் மட்டுமே அவர்கள் ஆட்டோவை தேடி வருவார்கள். உதாரணமாக மருத்துவனைமக்கு, அரசு அலவலகங்களுக்கு ஒருவர் வருவதாக இருந்தாலுமே அவருக்கு ஒருவர் துணைக்கு வருவார்.

ஆனால், ஒருவரைதான் அனுமதிக்க வேண்டும் என்றால் ஆட்டோக்களை இயக்க அனுமதித்தும் பயனில்லை. எங்களுக்கு அதனால், இழப்புதான் ஏற்படும், ’’ என்றார்.

மதுரை மாநகர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆர்.தெய்வராஜ், கனகவேல், அறிவழகன் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் டிஜி.வினயை சந்தித்து மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

60 நாட்களுக்கு மேலாக நாங்கள் ஆட்டோக்களை இயக்காமல் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். அரசு அறிவித்த நிவாரணமும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டநிலையில் ஆட்டோக்களை இயக்க அனுமதித்துள்ளதிற்கு நன்றி. அதேநேரத்தில் ஒரு பயணி மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அரசு பரிசீலிக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் மேலும் கூடுதலாக ஒரு பயணியை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x