புதுச்சேரியில் சாராயம் திருடப்பட்டதாக புகார்: பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயாரா? - அதிமுக கொறடாவுக்கு காங். எம்எல்ஏ சவால்

வையாபுரி மணிகண்டன் - விஜயவேணி: கோப்புப்படம்
வையாபுரி மணிகண்டன் - விஜயவேணி: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி அரசு சாராய வடி ஆலையில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாராயம் திருடப்பட்டதாக துணைநிலை ஆளுநரிடம் புகார் தரப்பட்டது. பொய்யென நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயாரா என்று புகார் தந்த அதிமுக கொறடாவுக்கு காங்கிரஸ் பெண் எம்எல்ஏ சவால் விடுத்துள்ளார்.

சாராய வடி ஆலை சீல் வைக்கப்படாததால் பல கோடி ரூபாய் பெறுமான சாராயம் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் புகார் தந்துள்ளார். முழு விசாரணைக்கு உத்தரவிடவும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் கோரியிருந்தார்.

இச்சூழலில் புதுச்சேரி சாராய வடி ஆலை தலைவரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஜயவேணி செய்தியாளர்களிடம் இன்று (மே 23) கூறியதாவது:

"அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் புதுச்சேரி அரசு சாராய வடி ஆலையில் ஊரடங்கு சமயத்தில் 6 டேங்கர் லாரியில் 10 லட்சம் லிட்டர் சாராயம் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அதன் மூலம் காங்கிரஸ் அரசின் மீதும், நான் தலைவராக பதவி வகிக்கும் புதுச்சேரி அரசு சாராய வடிகால் ஆலை நிர்வாகத்தின் மீதும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு கூறியுள்ளார்.

புதுச்சேரி சாராய ஆலை புதுச்சேரி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க கூடியது. மேலும், கலால்துறையின் அனுமதி இருந்தால் மட்டுமே சாராயத்தை வெளியில் எடுத்து வர முடியும். அப்படி இருக்கும்போது அவர் என் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

காரணம், இவர் மீது நான் ஏற்கெனவே சட்டப்பேரவை சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அது இன்று வரை நிலுவையில் உள்ளது. இதை மனதில் வைத்து நான் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தின் மீது இதுபோன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அதை உண்மை என்று நிரூபித்து விட்டால் நான் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்கின்றேன். அவர் கூறியுள்ளதை நான் பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி கொள்ள தயாரா?"

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in