Last Updated : 23 May, 2020 04:03 PM

 

Published : 23 May 2020 04:03 PM
Last Updated : 23 May 2020 04:03 PM

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி; நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு 

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கெனவே 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒருவர் கண்ணூர் மருத்துவமனையிலும், மற்றொருவர் சென்னை மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர்.

மாஹே பிராந்தியத்தில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கரோனா தொற்று பாதிக்கப்பட்ட வில்லியனூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன், குருமாம்பேட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர் மற்றும் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ஒருவர், தர்மாபுரி பகுதியை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று (மே 22) இரவு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வடமங்கலம், குருமாம்பேட், வேல்முருகன் நகரைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று (மே 23) காரைக்காலைச் சேர்ந்த பெண் குணமடைந்ததை அடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். எனவே இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். எனவே, தற்போது ஜிப்மரில் இரண்டு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழக நோயாளிகள் உட்பட 41 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் நேற்று மாலை முதல் இன்று வரை 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காரைக்காலைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்தது. ஆகவே அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதனால் கண்ணூர், சென்னையில் சிகிச்சை பெறுவோர் உட்பட புதுச்சேரியில் மொத்தம் 23 பேரும், மாஹே பிராந்தியத்தில் 2 பேரும் என 25 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது காரைக்கால், ஏனாமில் ஜீரோவாக உள்ளது. கடந்த சில நாட்களாக, நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை மாநிலம் முழுவதும் 6,234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 57 பேருக்கு மட்டும் முடிவு வரவேண்டியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் வெளிநாடு மற்றும் வெளிமாநில நபர்களின் வருகையால் தினமும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தி தொற்று அதிகரிக்காமல் இருக்க பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x