Published : 23 May 2020 03:42 PM
Last Updated : 23 May 2020 03:42 PM

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது: அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை

‘‘இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது, ’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள 32,324 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடியினை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 4 லட்சம் குடியிருப்புகள் உள்ளன இவற்றில் 1.50 லட்சம் குடியிருப்புகளுக்கு கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு 50 கிராம் கபசுரகுடிநீர் பொடி, ஜிங்க் சல்பேட் 150 மி.கி. மற்றும் வைட்டமின் சி 500 மி.கி. ஆகியவை வழங்கப்படுகிறது.

இது போன்ற மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியாவில் எந்த அரசும் வழங்காத அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக நேற்று முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 அறிவித்துள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல அரசின் சொந்த செலவில் அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கரோனா நோயினை நீண்ட காலம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

கரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் கே.பழனிசாமி விவசாயிகளின் காவலராக இருப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஏ.ராஜா, உதவி ஆணையாளர் சேகர், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x