Published : 23 May 2020 02:51 PM
Last Updated : 23 May 2020 02:51 PM

கரோனா காலத்திலும் தடையின்றி விநியோகம்: மக்கள் தங்களைக் கொண்டாடவில்லை என சிலிண்டர் விநியோகிப்போர் வருத்தம்

மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் பொது முடக்கத்தால் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் பொது முடக்கத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வீடு, வீடாகப் போய் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்கள் தங்களின் உழைப்பைப் பொதுமக்கள் கொண்டாடவில்லையே என வேதனை தெரிவிக்கின்றனர் .

இதுகுறித்து காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர் சிவக்கண்ணன் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடுதான் வீடுகளுக்குச் செல்கிறோம். கையுறை, மாஸ்க் சகிதம் போய் வீடுகளில் சிலிண்டர்களை விநியோகிக்கிறோம். நகரப் பகுதிகளை ஒப்பிடும்போது கிராமத்து மக்களிடம் இன்னும்கூட விழிப்புணர்வு இல்லை. அதை அதிகப்படுத்த நாங்களும்கூட சிலிண்டர் சப்ளை செய்யும் வீடுகளில் எங்களால் முடிந்த விழிப்புணர்வைக் கொடுக்கிறோம்.

தினமும் 40 முதல் 50 வீடுகள் வரை சிலிண்டர் சப்ளை செய்வது வழக்கம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை கைகளைச் சோப்புப் போட்டு நன்றாகக் கழுவிக் கொள்கிறோம். சில வீடுகளுக்குப் போகும்போது வெளியூரில் இருந்து வந்தவர்கள் இருப்பதாக அச்சம் வந்தால், உடனே கைகளைக் கழுவிக் கொள்வோம்.

பொது முடக்கத்தின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் வீட்டில் இருக்கவில்லை. அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சிலிண்டரும் இருக்கிறது. மருத்துவர்கள் கரோனா வார்டில் நோயாளிகளின் உயிரைக்காக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களோ மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை அவர்கள் தங்குதடையின்றித் தயாரிக்கும் வகையில் சிலிண்டர் விநியோகிக்கிறோம்.

இன்னொரு வகையில் சொன்னால் நாங்கள் காஸ் விநியோகித்த பொது முடக்கத்தின் தொடக்கத்தில் உணவகங்கள் கூட இல்லை. ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் களத்தில் நின்ற எங்களை பொதுச்சமூகம் மனதார பாராட்டக்கூட இல்லை.

இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்கிறோம். பொதுமக்களுக்கு எங்கள் வேலை தெரியவில்லையே என்ற வேதனை இருந்தாலும், கரோனா அச்சத்துக்கு மத்தியில் பொதுமக்களை உணவுத் தேவைக்காக வெளியே வரவிடாமல் வைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x