Published : 23 May 2020 02:05 PM
Last Updated : 23 May 2020 02:05 PM

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கே விரோதமானது; ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் விமர்சனம்

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 23) வெளியிட்ட அறிக்கை:

"திமுகவின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம்

சாதிய ரீதியாக யாரையும் இழிவுபடுத்துகிற நிகழ்வுகளையும், கருத்துக்களையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்து வரும் நிலையில் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

சமீபத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின மாணவனை தனது காலணியை கழற்றச் சொல்லி இழிவுபடுத்திய பிரச்சினையில் அமைச்சர் வருத்தம் தெரிவித்துவிட்டார் என வழக்குப் பதிவு செய்ய அதிமுக அரசு மறுத்துவிட்டது.

ஆனால், ஆர்.எஸ்.பாரதி, தான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை எனவும், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிட்ட நிலையில் அவரைக் கைது செய்தது நேர்மையற்ற செயலாகும்.

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர் கதையாகி வருகின்றன. சாதிய ஆணவக் கொலைகள் நின்றபாடில்லை. இத்தகைய கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தல்களை எடப்பாடி பழனிசாமி அரசு கிடப்பிலே போட்டு வருகிறது.

தீண்டாமைக் கொடுமைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள முதல்வர் தலைமையிலான தீண்டாமை ஒழிப்புக்குழு பல ஆண்டுகளாக கூடவில்லை. மாவட்டங்களிலும் இத்தகைய குழு செயல்படவில்லை.

நடைமுறையில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கோடு இச்சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வது, சிறையிலடைப்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கே விரோதமானதாகும்.

மேலும், ஏற்கெனவே பெண்களையும், நீதித்துறையையும், பத்திரிகையாளர்களையும், காவல்துறையினரையும் அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள மறுத்த அதிமுக அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நோக்கம் என்பதைத் தவிர வேறல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்"

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x