

கைது செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, "தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என பேசினார்.
இப்பேச்சு கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அவரின் இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இன்று (மே 23) அதிகாலை, சென்னை, ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் இல்லத்தில் அவரை போலீஸார் , எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி எழும்பூரில் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, கைது செய்யப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "அரசுக்கு எதிராக பல ஊழல் புகார்களை நான் கொடுக்கின்ற காரணத்தினால் என்னை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டிவிட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார்கள்.
உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் பேரில் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் இப்போது என்னை கைது செய்கின்றனர். இன்னொரு மனு, இந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என போடப்பட்டுள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது.
இப்படி இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவசர அவசரமாக கரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களை போன்றோரை கைது செய்ய துடிக்கிறார்கள். அதை பற்றி கவலையில்லை. என் தலைவர் கருணாநிதி. அவர் 77-வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில், நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்" என்றார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நீதிபதியை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்.எஸ்.பாரதியை காவலில் வைக்க வேண்டும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை முடித்து வைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.