திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம்
ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம்
Updated on
1 min read

தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதாகக் கூறப்பட்ட புகாரில், திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அவரது இல்லத்தில் போலீஸார் கைது செய்தனர்.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, "தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என பேசினார்.

இப்பேச்சு கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அவரின் இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், இன்று (மே 23) அதிகாலை, சென்னை, ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் இல்லத்தில் அவரை போலீஸார் , எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி எழும்பூரில் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடல் பரிசோதனைக்குப் பின்னரே அவர் மீதான நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

இதனிடையே, ஆணையர் அலுவலகத்தில் திமுகவினர் குவிந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ளே செல்ல முயற்சித்ததால் திமுகவினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in