

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்காமல், மக்களை போராட்டத்துக்கு தூண்டிவிடும் வேலையை செய்து வருகிறார் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பவானி சட்டப்பேர்வைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், 900 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளால், சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் வலது, இடது கரைப் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில், கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்ல வசதியாக கால்வாய் சுத்தப்படுத்தும் பணி, கரைகள் உயர்த்தும் பணி நடைபெறுகிறது. இதனால், இந்தப் போகத்துக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, அடுத்த போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் மீது தொடர்ந்து விமர்சனம் செய்வதோடு, தொடர்ந்து தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறார். மேலும், அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்காமல், மக்களை போராட்டத்துக்கு தூண்டிவிடும் வேலையை செய்து வருகிறார். அவரது பேச்சு மக்களிடம் எடுபடாது.
கரோனா தடுப்புப் பணிக்காக மூடப்பட்ட ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள பாலம் 4 நாட்களில் திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.