

கோவை மாவட்டத்தில் ரூ.7.19 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உட்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் பேசும்போது, ‘‘பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி மற்றும் ரூ.1,652 கோடி மதிப்பிலான அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.7.19 கோடி மதிப்பில் 41 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நொய்யல் புனரமைப்பு பணிகளுக்கு ரூ.174.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
சாலை, மேம்பாலப் பணிகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளைத் துரிதப்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளை நடத்த அரசின் வழிகாட்டுதல்படி, தேவையான நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் புதிதாக கரோனா பாதிப்பு எதுவுமில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன’’ என்றார்.
தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவுக்கான கட்டணத்தை அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதுவரை ரூ.44.34 லட்சம் வழங்கியுள்ளதாகவும், ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.