தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வந்து டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர முதல்வருக்கு கோரிக்கை

தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வந்து டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர முதல்வருக்கு கோரிக்கை
Updated on
1 min read

தென் அமெரிக்க நாடுகளில் இருந்துவந்து டெல்லியில் சிக்கியுள்ள தமிழர்கள், தங்களை தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்அமெரிக்க நாடுகளில் இருந்து தமிழர்கள் 20 பேர் விமானம்மூலம் மே 21-ம் தேதி அதிகாலை டெல்லி வந்தனர். அங்கு அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. அங்கு இலவச தனிமைப்படுத்தும் மையங்கள் இல்லாத நிலையில், குறைந்தகட்டண ஹோட்டல்கள் நிரம்பிவிட்டதால், நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களை தமிழகம் அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லியில் சிக்கியுள்ள தமிழர் மருதுபாண்டி முத்துசாமியை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

நாங்கள் தென்அமெரிக்க நாடுகளான சிலி மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து வருகிறோம். கரோனாபாதிப்பால் அங்கு கடந்த 2 மாதங்களாக வேலை இல்லை. வருவாயும் இல்லை. இந்திய தூதரகம் மூலம் சிறப்பு விமானத்தில் 20 தமிழர்கள் டெல்லிக்கு வந்தோம். இந்தியா வந்ததும் 14 நாட்கள்கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவோம் என்றும் அதற்கான செலவைநாங்களே ஏற்கவேண்டும் என்றும்அதிகாரிகள் கூறினர். நட்சத்திரஹோட்டல்கள் மட்டுமே தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்படுகின்றன. 14 நாட்களுக்கான கட்டணத்தை முதலிலேயே கட்டினால் மட்டுமே அனுமதி என்றனர்.

பரிசோதனைக்கு ரூ.4,500

13 நாட்கள் கழித்து கரோனா பரிசோதனை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.4 ஆயிரத்து 500 கேட்கிறார்கள். 2 மாதங்களாக வேலைஇல்லாத சூழலில் விமான பயணத்துக்கு ரூ.1 லட்சம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்காக ரூ.64 ஆயிரம் செலுத்தி இருக்கிறோம். இங்கு 14 நாட்கள் முடிந்த பின்னர், நாங்கள் தமிழகம் செல்வதற்கும் என்ன ஏற்பாடு உள்ளது என்பது தெரியவில்லை. சென்னையிலும்14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவோம். தற்போது எங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். நாங்கள் விரும்பினால்கூட சென்னைக்கு கிளம்பி வர முடியாது.

டெல்லிக்கு அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகியவற்றை சேர்ந்த பயணிகளை அந்தந்தமாநில அரசுகள் அவர்கள் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்து சென்றுவிட்டனர். அதேபோன்று எங்களையும் தமிழகத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களுக்கு உடனே அழைத்துச் செல்ல தமிழக முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழிகாட்டுதல் இல்லை

இதுகுறித்து அரசுத் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது,“வெளிநாட்டில் இருந்து வரும்விமானம் எந்த மாநிலத்தில் தரைஇறங்குகிறதோ, அங்குதான் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் சென்னை வந்துவிட்டால், அரசு சார்பில் தனிமைப்படுத்தப்படுவார்கள். டெல்லியில் உள்ளவர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசே அழைத்துவர வழிகாட்டுதல்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in