

தமிழகத்தில் 16 நகரங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகிஉள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி பதிவானது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வெப்பமான தரைக்காற்று தொடர்ந்து வீசிவருகிறது. இதனால் தமிழக வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி வரை உயரக்கூடும். அதன் காரணமாக அனல் காற்றுவீசும். நேற்று மாலை 5.30 மணிக்குஎடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி 16 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரிபதிவானது. மேலும் வேலூரில் 108, சென்னை விமான நிலையத்தில் 106, திருப்பூர்,காஞ்சிபுரம், ஈரோட்டில் 104, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, சேலத்தில் 103,கடலூர், புதுச்சேரி, நாகையில் 102, பரங்கிப்பேட்டை, நாமக்கல், தருமபுரியில் 101, பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 12 செமீ மழை பதிவானது. அடுத்த 2 நாட்களுக்குகோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.