

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியில் அரசு உதவிப்பெறும் காந்திஜி தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில், கல்வியைத் தாண்டி நாடகக் கலையின் வழியாக ஒழுக்கம், அறம் சார்ந்த நன்னெறி கல்வியை வழங்கி வருபவர் தன்னார்வ ஆசிரியர் செல்வம். பள்ளி குழந்தைகளை நடிக்க வைத்து அதன்மூலம் சமூகத்தை பற்றிய சிந்தனைகளை அவர்களிடம் வளர்த்தெடுத்து வருகிறார்.
அவர் அதற்காக அவர்களிடம் கட்டணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே 'நாடகக் கலை' மூலம் இந்த சேவையை செய்து வருகிறார். தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு தனியார் பள்ளிகளில் கட்டணம் பெற்று இந்த வகுப்புகளை சொல்லிக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ‘கரோனா’ ஊரடங்கு நாடக ஆசிரியர் செல்வம்வாழ்க்கையையும் முடக்கிப் போட்டுவிட்டது. தனியார் பள்ளிகள் திறக்கப்படாததால் வருமானம் இழந்து அன்றாடம் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட இவரிடம் கற்ற காந்திஜி தொடக்கப் பள்ளி குழந்தைகள், தங்களது சேமிப்பில் இருந்து திரட்டிய தொகை ரூ.565-ஐ ஆசிரியர் செல்வத்துக்கு வழங்கி நெகிழ வைத்துள்ளனர். இந்த குழந்தைகளின் பெற்றோரும், அவர்களுடன் திரண்டு சென்று தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆசிரியர் செல்வத்தை அன்பு மழையில் நனைய வைத்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் செல்வம் கூறும்போது, “எதுவுமேஇல்லாத அந்த குழந்தைகள் வழங்கியது சிறிய தொகையாகஇருந்தாலும், எனக்கு உதவ வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் பல கோடி ரூபாய் அளவுக்கு பெரியது. எதிர்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆசிரியராக நான் நினைத்தேனோ, அதற்கு இந்த நிகழ்வே ஒரு சாட்சியாக உள்ளது” என்றார்.