பிச்சாவரம் சுற்றுலா படகு ஓட்டும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருக்க முடிவு

மனு அளிக்க வந்த படகு ஓட்டும் தொழிலாளர்கள்.
மனு அளிக்க வந்த படகு ஓட்டும் தொழிலாளர்கள்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா படகு ஓட்டும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சிதம்பரம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் பிச்சாவரம் சுற்றுலா படகு ஓட்டும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் இன்று (மே 22) மாலை மனு கொடுத்தனர்.

அதில், "கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா படகு ஓட்டும் தளத்தில் எந்தப் படகும் ஓடவில்லை. இந்தச் சுற்றுலாத் தளத்தில் படகு ஓட்டுவதை நம்பி 53 குடும்பங்கள், கடந்த 30 ஆண்டுகளாகப் பிழைத்து வருகின்றோம். அரசின் ஊரடங்கு உத்தரவால் படகுகள் ஓடாததால் எங்கள் பிழைப்பு மொத்தமாகப் பாதித்துள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் நீண்ட விடுமுறையையொட்டி நிறையக் கூட்டம் வரும். நாங்களும் இப்போதுதான் வருமானம் ஈட்ட முடியும். ஆனால், இப்போது மொத்தமாக எங்கள் பிழைப்பு முடங்கிக் கிடப்பதால் நாங்கள் மிகவும் வறுமையில் உள்ளோம். மார்ச் மாதப் பாதிப்புக்காக எங்கள் துறை சார்பில் ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்பட்டது. ஆனால், ஏப்ரல், மே மாதங்களுக்கு இதுவரை எந்தத் தொகையும், நிவாரணமும் வழங்கவில்லை.

எனவே பிழைக்க வேறு வழி இல்லாத நிலையில், ரூ.10 ஆயிரம் நிவாரணம் கேட்டு, நாங்கள் குடும்பத்துடன் வருகின்ற 25-ம் தேதி, திங்கள் கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதென முடிவு செய்துள்ளோம். எனவே, தாங்கள் தலையிட்டு எங்கள் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in