Published : 22 May 2020 18:43 pm

Updated : 22 May 2020 18:43 pm

 

Published : 22 May 2020 06:43 PM
Last Updated : 22 May 2020 06:43 PM

கரோனா தொற்றைப் பொறுப்பற்றுக் கையாளும் அரசின் செயல்; நெஞ்சம் வலிக்கிறது: சோனியா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் வேதனை

the-government-s-reckless-handling-of-the-corona-epidemic-is-alarming-stalin-agonized-over-sonia-gandhi-s-consultation

கரோனா தொற்றுப் பிரச்சினையைப் பொறுப்பற்ற முறையில் இந்த அரசு கையாண்ட விதத்தைக் காணும்போது நெஞ்சம் வலிக்கிறது. ஆனால், இதை நான் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. நாம் ஒன்றிணைந்து இதை வெல்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காணொலிக் காட்சி மூலம் நாடு முழுவதுமுள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

''முதலில், இந்த மிக முக்கியமான கூட்டத்தினைக் கூட்டியதற்காக, சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவிட் - 19 பிரச்சினையால் இந்தியா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டும், 3400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல; 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆரம்பம் முதற்கொண்டே இந்தப் பிரச்சினையை அரசு தாமதமாகவே கையாண்டு வருகிறது. ஊரடங்கு என்பது இந்நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான காலத்தைப் பெறுவதற்காகத்தான்; இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான முக்கிய அம்சம் என்பது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதுதான்.

அப்படியிருந்தும், முதலாம் ஊரடங்கு காலகட்டத்தில் பரிசோதனை விகிதம் என்பது பத்து லட்சத்திற்கு 32 பேர்தான் என்கிற அளவில் அவமானகரமாக இருந்தது. தமிழகத்தில் பாஜகவின் 'பிராக்சி' (Proxy) அரசாக அதிமுக செயல்பட்டு வருவதால், இங்குள்ள நிலைமையும் கொடூரமாக உள்ளது. இந்தப் பிரச்சினையை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், மார்ச் மாத இறுதி வரை அனைத்தும் வழக்கம் போலவே செயல்பட்டு வந்தது.

இந்த நோய்த்தொற்று குறித்து அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று இந்த அரசு உணர்ந்தபோது, எந்தவிதமான திட்டமோ அல்லது அது தொடர்பான யுக்தியோ வகுக்கப்பட்டிருக்கவில்லை.

ஒவ்வொருமுறை ஒரு அறிவிப்பை வெளியிடும்போதும், அது தொடர்பாக விளக்க அறிக்கைகளும், பின் இணைப்புகளும் வெளியிட வேண்டிய அளவிற்கு, அரசிடமிருந்து வந்த தகவல்கள் தெளிவற்றதாகவும், மக்களைக் குழப்புவதாகவும் இருந்தன.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும்கூட, அதிமுக அரசு கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்தது. மே 4-ம் தேதி வரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குள்ளாக, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30% பேர் கோயம்பேடு சந்தையினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.

இன்றைய தினம் தமிழகத்தில் நோய்த் தொற்று ஒவ்வொரு நாளும் 9% என்கிற அளவில் உயர்ந்து கொண்டே போகிறது. நோய்த் தொற்றின் தாக்கம் குறையவே இல்லை. மருத்துவப் பிரச்சினைகள் மட்டுமின்றி, பொருளாதாரப் பிரச்சினைகளும் கவனிக்கப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 40 கோடி பேர் வறுமையின் காரணமாக ஆபத்தான நிலைக்குக் கரோனாவால் தள்ளப்படுவார்கள் என்று முன்னதாகவே ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையமானது, தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற நிலை என்பது 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவிகிதத்தை அடையும் என்று கணித்தது. நாட்டிலேயே இது இரண்டாவது அதிகபட்சமாகும் என்பதோடு தேசிய சராசரியில் இருமடங்காகும்.

இத்தகைய நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து நமது மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவோம். நெருக்கடிகள் மிகுந்த காலகட்டங்களில் கூட, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைப் புறக்கணித்துவிடக் கூடாது. அனைத்து மாநிலங்களையும் சேர்த்த கூட்டு நடவடிக்கைக் குழு ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அல்லது பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளையும் மீறியே மத்திய அரசு செயல்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநில அரசுகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், இன்னமும் மாநில அரசுகளுக்குத் தரப்பட வேண்டிய ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உதவிகளும் வழங்குவது; சரியான கேள்விகளைக் கேட்டு அரசைப் பொறுப்புக்குள்ளாக்குவது என எதிர்க்கட்சித் தலைவர்களாக நமக்கு இரு முக்கிய பணிகள் உள்ளன. இந்தக் கரோனா வைரஸ் காலகட்டத்தில் திமுகவும் நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்வதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்.

'ஒன்றிணைவோம் வா' என்கிற திட்டத்தின் கீழ், 25 நாட்களுக்கு முன்னதாக ‘ஹெல்ப் லைன்' ஒன்றினை ஏற்படுத்தினோம். உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அந்த எண்ணிற்கு வந்தன.

இன்றைய காலகட்டத்தில், எந்த அளவிற்கு மக்கள் பரிதவிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. திமுக உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே ஒருங்கிணைந்து செயல்பட்டு, இதுவரை மாநிலம் முழுவதும் 28 லட்சம் உணவுப் பொட்டலங்களைத் தேவைப்படுவோருக்கு வழங்கியுள்ளோம்.

முறைப்படி செயல்பட வேண்டிய அரசு செயல்படாத காரணத்தால், நிவாரண உதவியை நாங்கள் செய்யும்போது, இதை எங்கள் கடமையாகவே கருதிச் செய்கிறோம். மக்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக ஒரு கூட்டுத் தீர்மானத்தை வடித்தெடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். எனவே, அரசு செய்ய வேண்டியவை குறித்து சில கோரிக்கைகளை முன்மொழியக் கடமைப்பட்டுள்ளேன்.

கோரிக்கைகள்

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான யுக்திகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். இடைக்கால முடிவெடுக்கும் முறையானது (ad-hoc decision making approach) நிச்சயம் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

ஏழை – எளிய மக்களுக்கு, குறிப்பாக, வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் நேரடியாகப் பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். திமுகவும், காங்கிரஸும் வலியுறுத்தியபடி, தேவையில் உள்ள மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கப்பட வேண்டும். ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்களுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும்.

கடந்த காலங்களில், தலைவர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்தபடி, விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களின் கடன்களுக்கு காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும்.

“நாம் வகிப்பது பதவியல்ல; பொறுப்பு” என்று பொது வாழ்வு குறித்து தலைவர் கலைஞர் எப்போதும் குறிப்பிடுவார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து அரசு தோல்வியடைந்துவிட்ட இத்தருணத்தில், அந்தச் சொற்றொடர் மிகவும் முக்கியமானதொரு நினைவூட்டலாக அமைகிறது.

இந்தக் கரோனா தொற்றுப் பிரச்சினையைப் பொறுப்பற்ற முறையில் இந்த அரசு கையாண்ட விதத்தைக் காணும்போது நெஞ்சம் வலிக்கிறது. ஆனால், இதை நான் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்தக் கொடூரத்தை உண்மையிலேயே வென்றுவிடலாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

The government's reckless handlingCorona epidemicAlarmingStalin agonizedSonia Gandhi's consultationகரோனா தொற்றுபொறுப்பற்று கையாளும் அரசின் செயல்நெஞ்சம் வலிக்கிறது: சோனியாஆலோசனைக்கூட்டம்ஸ்டாலின் வேதனைகரோனாகொரோனாCorona tn

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author