

சிவகங்கை அருகே கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்ற சமுதாயக் கூட பூமி பூஜையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், விழா பாதியில் நிறுத்தப்பட்டது.
சிவகங்கை அருகே கோவானூரில் கிராமமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று முருகன் கோயில் அருகே ரூ.20 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சமுதாயக் கூடத்திற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் அங்கு வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் முன்னிலையில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதில் இருத்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாததால் பூமி பூஜையை ரத்து செய்துவிட்டு அமைச்சர் வெளியேறினார். தொடர்ந்து அமைச்சர் அதே ஊரில் ரூ.6.25 லட்சத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து காளையார்கோவில் அருகே இலந்தக்கரை, இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ரூ.1.87 லட்சத்தில் குடிமராமரத்து பணியை தொடங்கி வைத்தார்.