

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு முதற்கட்டமாக ரூ.7 கோடியில் குடிமராமத்து பணி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கட்டட பணிகளை தொடங்கி வைத்தார். விழாவின்போது கரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தில் 31 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ34.89 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து எட்டயபுரம் வட்டம் கருப்பூரில் உள்ள அருணாசலபுரம் கண்மாயை ரூ.58 லட்சத்தில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் உள்ள காவல் சோதனைச்சாவடியில், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களை பரிசோதிக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெப்ப பரிசோதனைக் கருவியை தொடங்கி வைத்தார். பின்னர் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட கரோனா பரிசோதனை அறையை திறந்து வைத்தார்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் ராஜ்குமார், அழகர், மணிகண்டன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் முனிய சக்தி ராமச்சந்திரன், கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டமாக குடிமராமத்து பணி திட்டம் உள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு நூற்றுக்கணக்கான கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்பட்டன. இதனால் கோடை காலத்திலும் நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு முதற்கட்டமாக ரூ.7 கோடியில் குடிமராமத்து பணி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் இந்த திட்டத்தில் தூர்வாரப்பட உள்ளன.
வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் அங்கேயே மருத்துவ சோதனை செய்திருந்தாலும், இங்கு வந்த பின்பு மீண்டும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்.
திரைப்படத்துறை பொருத்தவரை முழுமையாக படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. அதைப்போல் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் என்னை சந்தித்து படப்பிடிப்புக்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை நான் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். தமிழக முதல்வர் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல் திரைப்படத் துறையும் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டுள்ளனர். இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.
திரையரங்குகளும் தற்போது இயங்கவில்லை. அவர்கள் கேளிக்கை வரி ரத்து உட்பட சில சலுகைகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன், என்றார் அவர்.