Published : 22 May 2020 03:13 PM
Last Updated : 22 May 2020 03:13 PM

கரோனா சிகிச்சையில் அரசியல் தலையீட்டால் பின்னடைவு?- உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: முத்தரசன் வலியுறுத்தல் 

கரோனா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசு ‘சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது மற்றும் அதன் ஆலோசனைகள் ஏற்கப்படாதது தான் கரோனா நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு காரணமாகும்’ என்ற கடுமையான புகார் எழுந்துள்ளது இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசு ‘சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது மற்றும் அதன் ஆலோசனைகள் ஏற்கப்படாததுதான் கரோனா நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு காரணமாகும்’ என்ற கடுமையான புகார் எழுந்துள்ளது. ‘பலரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க முடியவில்லை’ என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வலுவான சுகாதாரக் கட்டமைப்பு இருந்தும் ‘பலவீனமாக அரசியல் தலைமையால் ‘சரியான திசைவழியில் செயல்படுத்த முடியவில்லை’ என்ற பரிதாபகரமான நிலவரம் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் வெளிப்பட்ட கரோனா நோய் பெருந்தொற்று குறித்து ஆரம்பக் கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக இருந்துவிட்டன. இந்த நோய் ‘பணக்காரர்களுக்கு ஆனது. ஏழைகளைப் பாதிக்காது‘ என்றும், ‘இன்னும் மூன்று நாள்களில் கரோனா நோய் பெருந்தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு பூஜ்ய நிலைக்கு வரும்’ என்றும் முதல்வர் தவறான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததது ஏடுகளில் பதிவாகியுள்ளன.

இன்று தமிழ்நாட்டில் 14 ஆயிரம் பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 63 சதவீதம் பேர் பாதித்துள்ளனர் என்பதும், தினசரி 500 பேர் அளவில் பாதிக்கப்பட்டு வருவதும், மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அபாயகரமான சூழலை உருவாக்கி வருகின்றன.

கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்த போது, முதல்வரும், அவரது அமைச்சர்களும் ‘கரோனா நோய் பெருந்தொற்று என்பதைத் தடுக்க வேண்டிய பணிகள் மருத்துவர்களால் செய்ய வேண்டியது .

இதில் அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது எதற்காக? அவர்கள் எல்லோரும் என்ன மருத்துவர்களா? என்று ஏளனப்படுத்தி நிராகரித்தார். பின்னர் “அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை“ என்று வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்கள் மீது முதல்வர் குற்றம் சுமத்தினார்.

இதனைத் தொடர்ந்து ‘கோயம்பேடு வியாபாரிகள் அரசின் முடிவை ஏற்கவில்லை’ என வியாபாரிகள் மீது குற்றம் சுமத்தினார். முன்னுக்குப் பின் முரணாக முதலவர் பேசி வரும் நிலையில் ‘சுகாதாரத் துறையினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவில்லை’ அதன் ஆலோசனைகளும் ஏற்கப்படவில்லை என்ற உண்மை தான் கரோனா நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு முதன்மைக் காரணமாகும்.

பொது சுகாதாரத்தில் ஏற்பட்ட அவசரநிலை காலத்தில், சுகாதாரத் துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத, அதன் ஆலோசனைகளைக் கேட்காமல் அலட்சியம் செய்த, நோய் பெருந்தொற்றுப் பரவலுக்குக் காரணமானோர் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x