

நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தென்காசி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், நிர்வாகிகள் சிலர் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சிஐடியு மாவட்டத் தலைவர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ‘தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதுவரை 10 சதவீத தொழிலாளர்களுக்கு மட்டுமே கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் நலவாரிய தொழிலாளர்களுக்கு 6 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை.
கரோனா நிவாரண நிதியும் வழங்கவில்லை. எனவே, ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு 6 மாத ஓய்வூதியம், கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம், அரிசி, பருப்பு வழங்க வேண்டும். நலவாரிய புதுப்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் தனியாக நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மேலும், தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மின்சாரத்தை தனியாருக்கு தாரைவார்த்து மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.